Use any UPI app to scan the QR code
மாயா பிரபஞ்சப் புராணங்களின் வாயிலாக, ஆதி அமிர்தப் பிரபஞ்சத்தைக் கண்டறியத் தக்க தள விவரங்களோடு "அகிலத்திரட்டு அம்மானை" ஆகமத்தின் வேத சாத்திரப் புராணம் விளங்குகிறது.
அய்யா வைகுண்டர் சுத்தப் பரபிரம்மப் பால வடிவமாகத் திகழ்ந்தார். பூலோகத்தின் கன்னி மூலையான தெட்சணத்தில் அவர் பள்ளி கொண்ட தவத்தில் இருந்தபோது, பெரும்புவியாகத் திரியும்போது பிரபஞ்சம் எவ்வாறு இருக்கும் என்பதைத் தற்போது அறிந்துகொள்ள அகிலத்திரட்டு அம்மானை உதவுகிறது.
அகிலத்திரட்டு அம்மானை ஆகமம், திரேதா யுக கடைக்காலத்தில் பால வியாசரால் திருக்கயிலையில் முதலில் கூறப்பட்டது. பரராச மாமுனிவர் தவமிருந்து பெற்ற பாலனோடு திருக்கயிலை சபையில் வந்தார். அப்போது ஈசன் குழந்தையைப் பற்றி விசாரித்தார். ஈசனிடம், "இக்குழந்தைக்கான தவம், அதனால் அறியப்பட்ட முகூர்த்தம், இம்முகூர்த்தத்தில் புணர்ச்சி நிகழ்ந்த புராணம், அப்போது கருவாகிப் பிறந்ததால் முகக்கமும் கணித்தல், மூதூணர் ஆகமங்கள் அமைந்துள்ள ஆசு - மதுரம் - வித்தாரம் - சித்திரம் என்ற சொல்முறைகளை ஆராய்ந்து கூறுதல், அதற்கு மேலான கல்லாதக் கல்வியான கலக்கியானம், அண்ட பிண்டத் தோற்றத்தோடு அவற்றை உள்ளடக்கிய உயிரினங்களின் உடல்கள் குறித்த அறிவுகள், பிரபஞ்ச உற்பத்தியின் ஏக மூலமான ஏகச் சுழிமுனை, யுகங்களின் துவக்கம் முடிவாகிய பூரணங்கள் எல்லாம் விவரிக்க வல்லவன்" என்று கூறினார். அதனால் வியந்த ஈசன், பிரபஞ்ச புராணத்தை ஈசன் - உமையின் முன்பிறப்பு பின்பிறப்புகள் வாயிலாக வகைப்படுத்திக் கூறுமாறு கேட்டார். அதற்காக பால வியாசர் கூறிய உரையை நந்தீசர் எழுத்தாக்கினார். இவ்வாறு அகில புராணம் முதல் பிறவி அடைந்தது.
கலியுகத்தில் திருச்செந்தூர் பதியின் தெற்கு வாரிக்கரையில் பள்ளிகொண்டிருந்த நாராயணர், உமையவளின் அபய அழைப்புக்கு இணங்கி திருக்கயிலைக்குச் சென்று, கயிலை ஈசனோடு விவாதம் புரிந்தார். அப்போது எல்லோரும் கலியை அழித்துக் காக்கும்படி நாராயணரைச் சரணடைந்தனர். அதனால் கலியை அழிக்க ஏழு உலகத்தவரை பூமியில் பிறவி செய்து, சப்த மாதரின் தவத்தை நிறைவேற்றி பூமியில் பிறவி செய்து, மகாலட்சுமியைப் பொன்மகரமாகப் பிறவிச் செய்து, ஈசனைத் திருநடனம் ஆட வைத்து, இத்திருநடன விதிப்படி உலகில் வரும் செய்தியை உலகறியச் செய்வதற்காக, திருமங்கள சபையைக் கூட்டி, அச்சபையில் ஈசன் - பிரம்மா - நாராயணர் தேவ சங்கத்தாரின் மத்தியில், உலகத்தில் சன்னியாசி கோலத்தில் தாங்கள் பூமிக்கு வரும் விவரங்கள் அடங்கியச் செய்தியோடு சரஸ்வதி தேவிக்குக் கூறிட நாராயணரால் எழுதப்பட்டு பூமியில் எல்லோரும் அறியச் செய்வதற்காக அந்தணர் வசம் அனுப்பப்பட்டது. சரஸ்வதி தேவியின் திருவாசக வடிவில் நாராயணரின் கையெழுத்துடன் அகில ஆகமம் இரண்டாவது பிறவி அடைந்தது.
திரு லாடக் கயிலையில் ஈசனோடு உலக நடப்புகளைக் கவனித்திருந்த நாராயணர், உலகில் கலியின் கொடுமை உச்சமாகிய அவலம் கண்டு பொறுக்க இயலாமல், உடனே வைகுண்ட அவதாரம் புரிவதற்கு ஆயத்தமானார். அத்தருணம் ஆதி வியாசர் பெருமானை அழைத்து, பிரபஞ்சத்தின் முன்தோற்றமும், பின்தோற்றமும் கூறிட நாராயணர் கூறினார். இந்த உத்தரவினை ஏற்று வியாசர், அகில ஆகமத்தை மறுபடியும் கூறினார். அதனைக் கயிலை கல்லில் எழுத்தாக்கப்பட்டது. இது அகில ஆகமத்தின் மூன்றாவது பிறவியாக விளங்கியது.
சரஸ்வதி தேவி, வியாசப் பெருமான் கூறிய ஆகமங்களை ஆய்வுச் செய்து வைகுண்ட அவதார முகூர்த்த நிகழ்வுகளைக் கணித்துக்கொண்ட நாராயணர், திருக்கயிலையின் கிரிகோயில் பகுதியில் இருந்து பூலோகத்துக்குப் புறப்பாடு செய்தார். அவரோடு ஈசன் முதல் சங்கமானவர்கள் கூடி, திருச்செந்தூர் கடற்கரையில் வந்து கந்தன் வரவேற்பை ஏற்று கடற்கரையில் சங்கம் செய்தனர். அச்சங்கத்தார் மத்தியில் நாராயணர் விஸ்வரூப அவதாரம் அடைந்து, கடலுள் விஸ்வரூப உரு வளர்ந்திருந்த பொன் மகாலட்சுமியிடம் சென்றார். பிறகு விந்துவழி திருவருளாடல் வடிவில், அய்யா வைகுண்டர் அவதாரம் திருச்செந்தூர் கடலுள் ஏற்பட்டது. கடலில் பிறந்த வைகுண்டர் புறப்பட்டு திருச்செந்தூர் கடற்கரையில் எழுந்தருளியபோது, அவரின் விஸ்வரூப நிலையை ஆதிக்கயிலையில் இருந்த முனிவர்கள் தரிசித்தனர். அவரின் அவதார காரணப் பூரணங்களை ஆராய்ந்து முனிவர்கள் பிரபஞ்சம் தோன்றிய மூலம் தழுவிய ஆகமத்தை வகுத்தனர். அதனைக் கயிலைச் செகத்தூணில் பதித்தனர். இத்தருணம் அகில ஆகமம் நான்காவது பிறவி அடைந்தது.
திருச்செந்தூர் தலத்தில் இருந்து தெச்சணத்தில் (தென் குமரி) எழுந்தருளினார். பிரபஞ்சத்தின் எந்தப் பதிவும் இல்லாத சுத்த பரபிரம்மச் சொரூபியான வைகுண்டர், தான் பள்ளிகொண்டு தவசு புரியும் தலத்தைக் கணித்துக்கொண்டார். எனினும் அதை உறுதிப்படுத்த வேத முனியானப் பிரம்மாவை அழைத்து கேட்டார். அப்போது ஆதி பிரம்மா, திருக்கயிலையில் பாலவியாசர் கூறிய ஆதி ஆகமத்தைக் கூறி, அதில் வைகுண்ட அவதாரம் குறித்தும், அவர் தவம் செய்யும் தலம் குறித்தும் கூறிய விவரங்களின் தொகுப்பாக அகில ஆகமம் பிரம்மாவின் வாயிலாக ஐந்தாவது பிறவி அடைந்தது.
அய்யா வைகுண்டர் தெச்சணத்தில் பள்ளிகொள்கிறார். அம்மூலந்தழுவி மானுட நிறத்துடன் இருந்து முத்தவம் நிறைவேற்றுவதற்கிடையே கலி சங்காரம் நிகழ்ந்தேறியது. பிறகு பக்தர்களுக்கு வழங்கிய துவையல் தவமும், அய்யாவின் முத்தவமும் நிறைவேறிய பிறகு விஸ்வ நாராயணர், ஈசர் - உமை, பிரம்மா - சரஸ்வதி - ஆனைமுகனோடு தேவ சங்கத்தார்கள் வந்து, ஆதிக்கலி அரக்கன் உயிர் அழிந்து நரகத்துக்குச் சென்ற செய்தியைக் கூறி, வைகுண்டரை பாற்கடலுள் அழைத்துச் சென்று மங்கள விஞ்சை வழங்கினார்கள். இம்மங்கள விஞ்சைப்படி அய்யா வைகுண்டர் நித்தம் திருநாள் - வாரத்திருநாள் - மாதத்திருநாள், ஆண்டு திருநாள் என தேவர் திருநாட்களை ஏற்றருளத் துவங்கினார். இதன் நீட்சியில் சிவஞான முக்தி முகூர்த்தம் புரிவதற்காக, விஸ்வ நாராயணர் திருக்கயிலையில் எழுந்தருளியிருந்தார். அங்கு மகா சபைக் கூடியது. அந்த சபையில் மாயா பிரபஞ்சம் அறியாத பரமதிரு லட்சுமி நாராயணரைத் தரிசிக்க வந்திருந்தார். அச்சபையில் விஸ்வ நாராயணனிடம், "என்னைத் திருக்கல்யாணம் செய்து கோவரிக் குண்டக் குடியிருப்பில் இருத்திவிட்டு, எதிரி வந்துவிட்டான் என்று போனீர்களே, உங்களுக்கு எப்படி எதிரி வந்தான் என்று தாங்கள் அறியக் கூறுங்கள்" என்று பரமதிரு லட்சுமி கேட்டதற்கு பதிலுரையாக நாராயணர் கூறிய உரையை, பூமியில் அய்யாவின் சீடனாக விளங்கிய அரிகோபாலனை (சகாதேவன் சீடர்) வைகுண்டர் தமது ஆளுமைக்கு வயப்படுத்தி எழுத வைத்தார். இவ்வாறு அகில ஆகமம் ஆறாவது பிறவி அடைந்த ஏடு நடைமுறையில் உள்ளது. இந்த ஏட்டில் விவரிக்கப்பட்டுள்ளவை பிரபஞ்சத்துக்கு விதித்த கணக்காக விளங்குகிறது. அக்கணக்குகளில் முக்கியமாக ஒரு உயிரின் பரான்மா நிலை யாது? சீவான்மா நிலை யாது? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் சேவையில் அகிலாலயா உள்ளது.